ஜே.பி.நட்டாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று கோவை வந்தார். முன்னதாக அவர் காலையில், கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கோவை வர தாமதமானதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அகில இந்திய அளவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாராளுமன்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக தான் கோவை, நீலகிரியில் இருந்து தேசிய தலைவர் தனது நாடாளுமன்ற பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பகுதி மக்கள் தேச பக்தி உடையவர்கள். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
