இந்தியா

முடிவுக்கு வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டம்..!

இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த தொடர் போராட்டத்தை விவசாயிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் ஒன்று கூடி கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, நாடாளுமன்றத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்டவை தொடர்பாக, விவசாயிகளுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது .

மத்திய அரசு அளித்த உறுதியில் நம்பிக்கை வந்ததால் ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குள் மத்திய அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதைடுத்து டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை விவசாயிகள் அகற்றி வருவதுடன், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட ஆயத்தமாகி வருகின்றனர்.