இந்திய விளையாட்டு துறையில் சாதனைபடைத்த 11 பேருக்கு கேல்ரத்னா விருது..!
இந்திய விளாயாட்டு துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.
பொதுவாக இந்த விருது வழங்கும் விழா தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந்தேதி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு டோக்கியோவில் ஜூலை-ஆகஸ்டில் நடந்த ஒலிம்பிக் போட்டி, அதைத் தொடர்ந்து அங்கேயே நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் வீரர்களின் செயல்பாடுகளை கவனத்தில் கொள்வதற்காக விருது நடைமுறைகள் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போனது.
இந்த விருதுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் தனியாகவும், தாங்கள் சார்ந்த விளையாட்டு சங்கங்கள் வாயிலாகவும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதைத் தொடர்ந்து தேசிய விருதுக்கான கமிட்டி அலசி ஆராய்ந்து அதில் தகுதியானவர்களை விருதுக்கு தேர்வு செய்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு நேற்று பரிந்துரை செய்தது. பெரும்பாலும் பரிந்துரை பட்டியலை அப்படியே விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும். விருது பட்டியல் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில் விருது கமிட்டியால் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த முறை விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல்ரத்னா விருதுக்கு 11 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இதே டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய மல்யுத்த வீரர் ரவிகுமார் தஹியா, வெண்கலப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், வெண்கலம் வென்ற இந்திய ஆக்கி அணியில் அங்கம் வகித்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த அவனி லெகரா, மனிஷ் நார்வால் (இருவரும் துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் (இருவரும் பேட்மிண்டன்) ஆகியோர் கேல்ரத்னா விருது பெறுகிறார்கள். இவர்களை தவிர்த்து இந்திய கால்பந்து அணிக்காக அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்திருக்கும் கேப்டன் சுனில் சேத்ரி (125 ஆட்டத்தில் 80 கோல்), பெண்கள் கிரிக்கெட்டில் 20 ஆண்டுக்கு மேலாக கோலோச்சுபவரும், பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவருமான இந்திய அணியின் கேப்டன் 38 வயதான மிதாலிராஜ் ஆகியோரின் பெயரும் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கேல்ரத்னா விருதை பெறும் முதல் கால்பந்து வீரர் என்ற பெருமை சுனில் சேத்ரிக்கு கிடைக்கிறது. கேல் ரத்னா விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
கடந்த முறை அதிகபட்சமாக 5 பேருக்கு கேல்ரத்னா விருது அளிக்கப்பட்டது. முதல்முறையாக தற்போது இரட்டை இலக்க எண்ணிக்கையில் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
