சர்ச்சை விடியோ வெளியீடு… நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு…
பட்டியலின சமூகம் குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறிய நடிகை மீரா மிதுன் மீது பிரிவுகளின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரைப்படங்களில் சில படங்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன். இவர் அழகி போட்டியில் கலந்து கொண்டபோதே போலியான அழகி பட்டம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
பிரபல நடிகர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை அவதூறாக பேசுவதை நடிகை மீரா மிதுன் வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஒரு வீடியோ ஒன்றை தனது காதலருடன் வெளியிட்டிருந்தார். அதில் தமிழ் சினிமா துறையில் இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் கிரிமினல்ஸ் என்றும் அவர்கள் சினிமா துறையை விட்டே விலக்கி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது இந்த சர்ச்சை வீடியோவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டனங்களை பதிவிட்டு, காவல் நிலையத்தில் புகாரும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை மத்திய குற்றபிரிவு போலீசில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு, நடிகை மீரா மிதுன் மீது புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில், மீரா மிதுன் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 3 பிரிவுகளிலும், இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் 4 பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
