அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணிதான் காரணம்… மனம் வெதும்பிய சி.வி.சண்முகம்….
அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த நிலையில், தோல்வியை தழுவியது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற அதிமுகவின் கனவு கலைந்து போனது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதிமுகவின் தோல்வி குறித்து ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்தார். இந்த நிலையில், விழுப்புரத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கலந்து கொண்டு பேசினார்.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கு காரணம் என்று கூறினார். 3-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்போம். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. பாஜக – அதிமுக கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்கவில்லை அதனால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. சிறுபான்மையினரின் வாக்குகளை முதன்முறையாக, முழுவதுமாக இழந்துவிட்டோம்.

பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால், சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும் என்று சி.வி.சண்முகம் பேசினார். அவரது பேச்சு பாஜக – அதிமுக கூட்டணிக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது.
