டாஸ்மாக்-ல் 12 ஒயின் பாட்டில்களை காலி செய்த எலி கூட்டம்…!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இயக்கம், ஜவுளி கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று (5.7.2021) திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை ஒன்றில் இருந்த ஒயினை, எலி கூட்டம் குடித்து தீர்த்து விட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே காலம்புழாவில் உள்ள டாஸ்மாக் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊரடங்கு முடிந்து டாஸ்மாக் கடைகள் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த ஒயின் பாட்டில்களின் மூடியை கடித்த எலி கூட்டங்கள் 12 ஒயின் பாட்டில்களை காலி செய்துள்ளன. 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அந்த மது பாட்டில்களை எலி கூட்டம் காலி செய்திருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
மின் கம்பிகள் மீது அணில்கள் செல்வதால் மின் தடை ஏற்படுவதாக அமைச்சர் கூறியதற்கு, பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில், டாஸ்மாக் கடையில் 12 ஒயின் பாட்டில்களை எலிகள் குடித்திருப்பதாக வெளியான செய்திக்கு நெட்டிசன்கள் பலவாறு விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
மின்சாரம் தடை ஏற்பட்டால் அணில் காரணம் என்று கூறியவர்கள், மது பாட்டில்கள் உடைந்து இருந்ததால் எலிகள்தான் காரணம் என்று கூறுவதா? என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் அணில், எலிகளுக்குப் பிறகு வேறு எந்த விலங்கு மாட்டப்போகிறதோ? அடுத்து ரேஷன் கடையில் சர்க்கரை காணாமல் போனால், எறும்புதான் காரணம் அப்படின்னு சொல்வாங்களோ? என்றும் பதிவிட்டுள்ளனர்.
சிலர், ஒயின் சாப்பிட்டா கலர் ஆகிடுவோம்னு யாரோ சொன்னதை நம்பி எலி முயற்சி செஞ்சிருக்குமோ? மது அருந்தும் அளவுக்கு அந்த எலிகளுக்கு என்ன பிரச்சனையோ? ஒருவேளை அந்த எலி கூட்டங்கள் சுந்தரா டிராவல்ஸ் எலியா இருக்குமோ? என்றும் நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
