எலுமிச்சை, ஐஸ்கிரீம் விற்ற ஊருக்கே போலீஸ் அதிகாரியாக வந்த “சாதனை பெண்”…
காதல் கணவரால் கைவிடப்பட்டு, கைக்குழந்தையுடன் வீதியில் எலுமிச்சை, ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வந்த பெண் ஒருவர், அதே ஊரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், காஞ்சிராம்குளத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.ஆனி சிவா (31), இவர் தனது கல்லூரி முதலாம் ஆண்டின்போது, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதல் கணவருடனான இல்லறவாழ்க்கை இரண்டு வருடங்கள் சென்ற நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 மாத கைக்குழந்தையுடன் வீட்டை வெட்டு வெளியேற்றப்பட்டார். ஆனியின் பெற்றோரும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. செய்வதறியாது திகைத்த ஆனிக்கு, அவரது பாட்டி ஆதரவளித்துள்ளார்.
பாட்டி வீட்டில் இருந்த ஆனி, தான் வசிக்கும் பகுதியில் எலுமிச்சை பழம், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனிடையே திருமணத்தால் தடைப்பட்ட கல்வியையும் அவர் தொடர்ந்து வந்துள்ளார். வைராக்கியத்துடன் வாழ்க்கையைத் துவக்கிய ஆனி, தற்போது போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஸ்கிரீம் – குளிர்பானங்கள் விற்பனை செய்த அதே பகுதிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியில் அமர்ந்துள்ளார்.

இது குறித்து ஆனி தனது பேஸ்புக்கில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வர்கலா சிவகிரி யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு எலுமிச்சை மற்றும் ஐஸ்கிரீம் விற்று வந்த நான், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அதே இடத்திற்கு திரும்புவதாக பதிவிட்டுள்ளார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனிக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனியின் பேஸ்புக் பதிவுக்கு, கேரள காவல் துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், இது ஒரு போராட்டத்தின் கதை என்றும், சவால்களுக்கு உறுதியுடன் நின்ற எங்கள் சகாவின் வாழ்க்கை என்று ஆனி குறித்து பதிவிடப்பட்டுள்ளது.
நடிகர் உன்னி முகுந்தன், பெண்கள் அதிகாரம் என்பது நிஜமாகிறது. பெரிய கனவுகள் மூலமாக, உண்மையான போராளி, அனைவருக்கும் உத்வேகமாக இருப்பார் என்று ஆனி குறித்து பதிவிட்டுள்ளார். சுகார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கணவரும் பெற்றோரும் கைவிட்டபோதும், வாழ்க்கையின் சவால்களுக்கு எதிராக போராடி பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார் என்றும் ஆனி உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனியின் வாழ்க்கை கதை மிகவும் உற்சாகமூட்டுகிறது என்றும் அவர் வாழ்க்கையின் வெற்றி மற்றும் மன வலிமையின் எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
