மருத்துவமனைக்கு வர மறுப்பு… கொரோனா பாதித்த முதியவர் ‘அடம்’…
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையிலும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வைரஸ் பாதித்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவ சிகிச்சை பெற மறுத்து அடம் பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்த முதியவர் முருகன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த முதியவர் முருகேசன், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், மருத்துவமனையைவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார். இதையறிந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசார், முருகேசனின் வீட்டுக்கு வந்து, அவரை அழைத்துள்ளனர். ஆனால் வீட்டுக்குள் சென்ற முருகேசன், கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார். மேலும் மருத்துவமனையில் இருப்பதற்கு தனக்கு அச்சமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் போலீசாரும், பொதுமக்களும், அதிகாரிகளும் முதியவர் முருகேசனுடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப்பிறகு அவர் மருத்துவமனைக்கு வர சம்மதித்துள்ளார்.
