தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது… சசிகலாவின் அடுத்த அதிரடி ஆடியோ ரிலீஸ்…
தனக்கெதிராக என்னதான் தீர்மானம் போட்டாலும், தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது என்றும், தாயையும் பிள்ளையையும் பிரிக்க முடியாது என்றும் சசிகலா அதிரடியாக பேசியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார். சட்டமன்ற தேர்தல் முடியும் வரை மௌனமாக இருந்த சசிகலா தற்போது, அதிமுக நிர்வாகிகளிடையே தொலைபேசியில் உரையாடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அதிமுகவினரிடையே பேசிய ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிமுகவினருடன் சசிகலா பேசும்போது, தனது உயிர் உள்ளவரை கட்சி வீணாகாமல் இருக்க பாடுபட தயாராக உள்ளதாகவும் கூறி வருகிறார். இந்த நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிமுக தலைமை தீர்மானம் நிறைவேற்றியது. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் உட்பட 15 பேரை கட்சியில் இருந்தும் அதிமுக தலைமையால் நீக்கப்பட்டனர்.
அதிமுக மாவட்ட செயலாளர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய 62-வது ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் தொண்டர்களையும், என்னையும் பிரிக்க முடியாது என்றும் என்னதான் தீர்மானம் போட்டாலும் தாயையும் பிள்ளையையும் பிரிக்க முடியாது என்று அதிரடியாக பேசியுள்ளார். ஒரு பக்கம் அதிமுகவினர் சசிகலாவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வந்தாலும், சசிகலா ஆடியோக்களை வெளியிட்டு வருவது அதிமுகவினரிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
