இந்தியா

“கர்நாடக கொடியில் நீச்சல் உடை”… அமேசானுக்கு எதிராக கொதித்தெழுந்த கன்னடர்கள்…

கர்நாடக அரசின் கொடி மற்றும் கர்நாடக அரசின் முத்திரை பதித்த நீச்சல் உடை, அமேசான் நிறுவனம் மூலம் கனடா நாட்டில் விற்பனைசெய்யப்பட்டு வருவது கர்நாடக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்துடன் இரண்டு சிங்கங்களின் உடல் அமைப்போடு, யானையின் முகத்துடன், கர்நாடக அரசின் சின்னத்துடன் கொடி இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் கர்நாடக அரசின் கொடியுடன் கூடிய நீச்சல் உடைகள், கனடா நாட்டில் அமேசான் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அறிந்த கர்நாடக மக்கள், மிகப் பெரிய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அமேசான் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு சார்பில் அனுப்பியுள்ள நோட்டீசில், தங்கள் கொடியின் அமைப்பில் உள்ள நீச்சல் உடை விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் மிக மோசமான மொழி என கூகுளில் தேடினால், கர்நாடக மொழி வந்ததற்கு கன்னடர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனையை கூகுள் நிறுவனம் சரிசெய்த நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தில் நீச்சல் உடை பிரச்சனை எழுந்துள்ளது.