“இந்துக்களை மதமாற்றம் செய்யுங்கள்”… மோகன் சி லாசரஸ் மீண்டும் சர்ச்சை பேச்சு…
திருச்செந்தூர் பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுமாடு கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு, மோகன் சி லாசரஸ் உத்தரவிட்டுள்ள வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துவ மதபோதகரான மோகன் சி லாசரஸ், ஜெபக்கூட்டம் கூட்டி, மதமாற்றம் பற்றியும், இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் திருச்செந்தூரில் மோகன் சி லாசரஸ் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டத்தில் மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அவரது அவச்சுக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
திருச்செந்தூர் பகுதியில் 6 லட்சம் இந்துக்கள் உள்ளார்கள் என்றும் அவர்களில் ஒருவரையாவது நீங்கள் மதமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். தெருவில் இறங்கி மதமாற்றம் செய்யும் பணிகளில் உங்களை ஈடுபட சொல்லவில்லை; ரயிலில் பயணிக்கும்போது, பேருந்து நிலையத்தில் நிற்கும்போது, வேலை செய்யும் இடத்தில் ஒருவரிடமாவது பேசி, அவர்களை சுவிசேஷம் செய்யுங்கள்; ஒருவரையாவது மதமாற்றம் செய்வேன் என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள் என்று பேசியுள்ளார். மதம் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அவர்களிடம் இயேசுவைப் பற்றி பேசுங்கள் என்றும் அவர் வீடியோவில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்கள் போன்ற ஆட்களினால், சமூக நல்லிணக்கம் கெடுவதாகவும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
