தமிழ்நாடு

மாஸ்க் அணிய சொன்ன அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டனர்… திமுக உடன்பிறப்புகள் வெறிச்செயல்…

முகக்கவசம் அணிய சொன்ன மாநகராட்சி அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர், தற்போது ஆட்சி அமைந்தவுடன் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதும், அவர்களை தாக்குவதுமாகி உள்ளது தொடர்கதையாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது, கிருமிநாசினி தெளிப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முகக்கவசம் அணிய சொன்ன மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவரை திமுகவினர் கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. கோவை, வடவள்ளி அடுத்த பி.என்.புதூர் பகுதியில் திமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. திமுக தொண்டர்கள் அங்கு கூட்டமாக நின்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு வந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் மாற்றுத்திறனாளியான ராஜேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் இருந்த திமுக நிர்வாகிகளிடம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், கூட்டமாக நிற்க கூடாது என்றும் கூறியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த திமுகவைச் சேர்ந்த பாக்கியராஜ், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரித்த நிலையில், அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர்.