Uncategorized

போலீஸை மிரட்டிய அடாவடி பெண்… 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு…

சேத்துப்பட்டு பகுதியில் ஊரடங்கு பணியில் இருந்த போலீசாரை மிரட்டிய பெண்ணின் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை, சேத்துப்பட்டு அருகே சிக்னல் ஒன்றில் போக்குவரத்து காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்த போலீசார், காரில் இருந்த பெண், முகக்கவசம் அணியாமல் இருந்ததை அடுத்து அபராதம் விதிக்க உள்ளதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது அம்மாவுக்கு போன் செய்து, அவரை வரவழைத்துள்ளார். சொகுசு காரில் வந்து இறங்கிய அந்த பெண்மணி, நடந்தவற்றைப்பற்றி எதையும் விசாரிக்காமல், போக்குவரத்து போலீசாரை கடுமையான வார்த்தைகளால் பேச தொடங்கினார். தான் ஒரு வழக்கறிஞர், தன்னால் அபராதம் கட்ட இயலாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த பெண்ணிடம், முகக்கவசம் அணிந்து பேசுங்கள் என்று போலீசார் கூறியபோது, “என்னால் மாஸ்க் அணிய முடியாது… நான் யார்னு காட்டுறேன்… யூனிபார்ம் கழட்டுறேன் பாக்குறியா”… என போலீசாரை நோக்கி அடாவடியாக பேசினார். பின்னர் காரின் நம்பரை வைத்து முகக்கவசம் அணியாத காரணத்திற்காக போலீசார் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. ஊரடங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோது மிரட்டியதாக அந்த பெண்ணின் மீது புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பெண்மணி மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.