Covid19இந்தியா

கொரோனா வைரஸை அழிக்கும் சக்திகொண்டதா இந்த பவுடர் மருந்து ?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்கும் விதமாக டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ள பவுடர் வடிவிலான ‘2டிஜி’ மருந்து விநியோகம் இன்று(மே 17) முதல் துவங்கி உள்ளது.

இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி திணறி வருகிறது. கடந்தவாரங்களில் தொற்று நாள் ஒன்றுக்கு 4 லட்சம் என்று இருந்த நிலையில் இப்போது சற்று குறைய துவங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாகி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, நோய் தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க, ‘2டிஜி’ எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து வினியோகத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.

‘பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்பட துவங்கும். இந்த மருந்தால் கொரோனா வைரசின் வளர்ச்சியை தடுக்கப்பட்டு, உயிர் பலியும் வெகுவாக குறைவதுடன், ஆக்சிஜன் தேவையும் குறையும்’ என, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

எங்கு பார்த்தாலும் கொரோனா தொடர்பான மரண செய்திகள் கேட்கின்றன. பெரும்பாலும் மக்கள் தடுப்பூசி செலுத்தி வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ரெம்டெசிவர் மருந்தை தேடி அலைய வேண்டி உள்ளது. இம்மருந்து கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருவதை பார்க்கவும் முடிகிறது. இந்நிலையில் இந்த ‘2டிஜி’ மருந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதை வரவேற்று சமூகவலைதள வாசிகள் டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர். இதனால் #2-DG, #Anti-COVID ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின.

இந்நிலையில் இந்த மருந்து எந்தளவுக்கு பலன் தரும் என்பதை நாம் பொருத்திருந்து பார்ப்போம்”. ‛