மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது.
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டாலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். எனவே, அந்த வகையில், மக்களின் நன்மைக்காக, மக்களின் உயிர் காக்கும் விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை, முயற்சிகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட முதல்-அமைச்சர், அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தங்களது ஊடகங்கள் மூலம் வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
மக்களின் நல்வாழ்வில்தான் நாட்டின் எதிர்காலம் அடங்கியிருப்பதால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா பெருந்தொற்றினை அகற்ற வேண்டும் என அவர் கூறினார் .
