அரசியல்தமிழ்நாடு

நாளை கூடுகிறது பாமக அவசர செயற்குழு கூட்டம்..!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க பாமக அவசர செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், இது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக அன்புமணி ராமதாசும், தவாக வேல்முருகனும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, சட்ட வல்லுனர்கள் கொண்டு கலந்து ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில், பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.