தமிழக தியேட்டர்களில் இன்று முதல் 100 சதவீத அனுமதி..! தளர்வுகள் குறித்த முழு விவரம் இதோ..
தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகம், மால்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்ளுடன் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்று முதல் அமலில் இருக்கும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 200 பேர் வரை பங்கேற்கலாம். அத்துடன் மழலையர் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. மேலும் உணவகங்கள், விடுதிகளில் 100 சதவீதம் பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களும் முழுமையாக செயல்பட இன்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
