தமிழ்த்தாய் வாழ்த்து-எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி ஊழியர்கள் – கனிமொழி எம்.பி கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில், “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்?” என திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் கொடியேற்றி குடியரசு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன் ஓரு பகுதியாக சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.
அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது.
ஆனால் சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மற்ற அலுவலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது” என்று சில அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி, “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?” என டிவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.
