அரசியல்

தமிழ்நாடு அரசு அறிவித்த குடும்ப கடன் ரூ.2.64/-… காசோலையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த நபரால் பரபரப்பு…!

தமிழக அரசின் நிதிநிலைமையை விளக்கம் வகையில், வெள்ளை அறிக்கை, நிதியமைச்சரால் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது என்றும் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் உபரி வருவாய் என்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அந்த நிலை மாறி, மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு 20.033 கோடியாக உள்ளது என்றும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,63,974 கடன் உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞராண ரமேஷ் என்பவர், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,63,976 ரூபாய் கடன் உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், கடனை அடைப்பதற்காக காசோலையுடன் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரது காசோலையை கோட்டாட்சியர் வாங்க மறுத்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து, அவரிடம் காசோலையை வழங்க முயன்றார். மாவட்ட ஆட்சியரும், ரமேஷ் அளித்த காசோலையை வாங்க மறுத்து விட்டார்.