“வாக்குறுதியை நிறைவேற்ற கேட்டால் வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுத்திறாதீங்க”… வானதி சீனிவாசன் டுவிட்…
வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால் வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது என்றும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014 – 2015 ஆண்டில் குறைவான இருந்த தமிழ்நாட்டின் கடன், பின்னர் பலமடங்கு அதிகரித்ததாகவும், அதிமுக அரசு கூறிய கடன் கணக்கு சரியாக இல்லை என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு ஆதரவான கருத்துக்களும் எதிர்ப்பு கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளை அறிக்கை குறித்து, முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறும்போது, அதிமுக வாங்கிய கடன்கள் அனைத்தும் வளர்ச்சி திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்றும் அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டிருப்பதாக கூறுவது தவறும் என்று கூறியிருந்தார். வெள்ளை அறிக்கை குறித்து, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்திருந்தனர். வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தனது டுவிட்டரில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கேட்டால், வெள்ளை அறிக்கையை பதிலாக கொடுக்காமல் இருந்தால் நல்லது என பதிவிட்டுள்ளார். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வானதி சீனிவாசனை டுவிட்டரில் பிளாக் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
