வெள்ளை அறிக்கை தொடக்க புள்ளியா? தப்பிப்பதற்கான முற்றுப்புள்ளியா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி…
வெள்ளை அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியா? அல்லது தப்பிப்பதற்கான முற்றுப்புள்ளியா? என்றும் மக்களை திசை திருப்பி அதிமுக மீது களங்கம் சுமத்த திமுக நினைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். கடந்த 5 ஆண்டு காலத்தல ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளதாகவும், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 கடன் சுமை உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்களை அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், வெள்ளை அறிக்கை வெளியிட்டு திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வெள்ளை அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தொடக்கபுள்ளியா? தப்பிப்பதற்கான முற்றுப்புள்ளியா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஏதேனும் காரணங்களைக் கூறி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தவே திமுக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மக்களை திசை திருப்பி அதிமுக மீது களங்கம் சுமத்த திமுக நினைப்பதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளர்.
