ஒரே போராட்டம்தான்… முடிவுக்கு வந்தது மேகதாது பிரச்சனை… அண்ணாமலை பேச்சு…!
தமிழகத்துக்கும் கர்நாடக அரசுக்கும் இடையே நிலவி வந்த மேகதாது அணை பிரச்சனை, முடிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
காவிரி குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே கடந்த 5 ஆம் தேதி, தமிழக பாஜக சார்பில், கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது, மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக போராட்டங்களால் எங்களுக்கு கவலை இல்லை எனும் தொனியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே நாடாளுமன்றத்தில், மேகதாது அணை குறித்து கர்நாடக எம்.பி.யால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர், மேகதாது அணை குறித்து கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்க முடியாது என்றும் தமிழகத்தின் அனுமதியின்றி இதனை செயல்படுத்த முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணை பிரச்சனை முடிந்து விட்டது என்றம், தமிழகத்தை கேட்காமல் அணை கட்ட அனுமதிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு நல்லது செய்ய திட்டமிட்டிருக்கும் பாஜக அரசு, நல்லதை செய்து வருகிறது என்றும் பாஜகவின் சித்தாந்தத்தை விரும்புவோர் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
