மாஸ்க்கை கழற்ற சொன்ன ஓசூர் பெண்ணிடம் செல்போனில் பேசிய முதல்வர்…
மாஸ்க்கை கழற்ற சொன்ன ஓசூர் பெண் ரம்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். விழா முடிந்த பின்னர், ஓசூர் சாலையில் முதலமைச்சர் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த ரம்யா என்ற பெண் ஒருவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, சார் மாஸ்கை எடுங்க… எப்ப சார் பார்க்கிறது… மாஸ்க்கை எடுங்க சார்… ஒரு டைம் பார்க்கிறோம்… ஒரு செகண்ட்தான் சார்… எப்ப பார்க்கிறது சார்… ரொம்ப வருஷங்களா ரொம்ப ஆசையா இருக்கிறோம்… என்று கூறினார். முகக்கவசத்தை அகற்றிய முதலமைச்சர், அந்த பெண்ணின் ஆசையைப் பூர்த்தி செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முகத்தைப் பார்த்து பேசியது சந்தோஷமாக உள்ளதாகவும், அவரிடம் கொடுத்த கடிதத்தில் பெயர் மற்றும் செல்போன் எண் குறிப்பிட்டுள்ளேன் என்றும் நிச்சயம் அவர் தனக்கு போன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு முதலமைச்சரின் உதவியாளர் தொடர்பு கொண்டு, முதலமைச்சர் பேச உள்ளதாக கூறினார். மகிழ்ச்சியில் திளைத்த ரம்யா, அவரது மகள் விஷ்மயா ஹரிணியும் முதலமைச்சருடன் செல்போனில் உரையாடினர்.
அவரிடம் பேசிய ரம்யா, வணக்கம் சார். நீங்கள் சாலை வசதியும், தண்ணீர் வசதியும் முழுமையாக செய்து கொடுத்தால் தமிழ்நாடு எங்கேயோ போய் விடும். நீங்கள் மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். இவ்வளவு எளிமையாக உங்களிடம் பேச முடியும் என நான் நினைக்கவே இல்லை சார். ஆட்சி மிகவும் நன்றாக உள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டும். நீங்கள் நீண்ட காலம் முதலமைச்சராக இருக்க வேண்டும். வாழ்த்துகள் சார். எனது தந்தையிடம் நீங்கள் பேச முடியுமா? என ரம்யா கேட்க, அவர் ஊரில் இருக்கிறாரா என முதலமைச்சர் கேட்க, அவர் ஊரில் இருக்கிறார் கான்பரன்ஸ் போடவா என முதல்வர் கேட்க, அவர் வந்ததும் எனக்கு போன் செய்து கொடுங்கள் என்று முதலமைச்சர் கூறினார். ரொம்ப நன்றி சார், சூப்பரா இருக்கீங்க சார். எவ்வளவு வயதானாலும் நீங்கள் அழகாக, ஸ்டைலாக இருக்கிறீர்கள் என்றார்.

பிறகு, ரம்யாவின் மகள் விஷ்மயாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆன்லைனில் சரியாக படிக்க முடியவில்லை என்றும் சீக்கிரமாக பள்ளியை திறக்க வேண்டும் என்றும் விஷ்மயா கூறியதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா பிரச்சனை குறையட்டும் அதன் பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்று கூறினார். ஓசூர் பெண் ரம்யா, அவருடைய மகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
