தமிழ்நாடு

அரசு ஊழியரைச் சாதி பெயரைச் சொல்லி காலில் விழ வைத்த கொடூரம்… கோவையில் அதிர்ச்சி…

கோவையில், பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியரின் சாதியைச் சொல்லியும், தகாத வார்த்தைகளால் பேசியும், காலில் விழ வைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், ஒற்றர்பாளையம் ஊராட்சியில் உள்ள விஏஓ அலுவலகத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் நிலம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்புக்காக வந்துள்ளார். ஆவணங்களைப் பார்த்த விஏஓ கலைச்செல்வி, முறையான ஆவணங்கள் இல்லை என்றும், சரியான ஆவணங்களைக் கொண்டு வரும்படி கோபிநாத்திடம் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத், பெண் என்றும் பாராமல் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபடும் வண்ணம் கோபிநாத் நடந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த அலுவலக ஊழியர் முத்துசாமி, அவ்வாறு பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கோபிநாத், உதவியாளர் முத்துசாமியை மிரட்டியுள்ளார். ஊழியர் முத்துசாமி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது சாதியைச் சொல்லி கோபிநாத் மிரட்டியுள்ளார்.

ஊரில் இருக்க முடியாது என்றும், உன்னுடைய வேலையை காலி செய்துவிடுவேன் என்று கூறிய கோபிநாத் தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி மிரட்டியுள்ளர். இதனால் பயந்துபோன ஊழியர் முத்துசாமி, மேசைமீது அமர்ந்திருந்த கோபிநாத் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதையடுத்து தான் உன்னை மன்னித்து விட்டதாக கூறியிருக்கிறார் கோபிநாத். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரான் தெரிவித்துள்ளார். ஒற்றர்பாளையம் விஏஓ அலுவலகத்துக்கு ஆர்டிஓ நேரில் சென்று விசாரிக்க மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.