அரசியல்தமிழ்நாடு

“மிசாவையே பார்த்த கட்சி… எந்த எதிர்ப்பையும் திமுக சமாளிக்கும்”: அமைச்சர் கே.என்.நேரு

எமெர்ஜென்சியையே கண்ட திமுக என்றும், சலசலப்புக்கு அஞ்சாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் ஆதார மேம்பாட்டு திட்டத்தில் தரைமட்ட தொட்டி கட்டுதல், மோட்டார் பம்புசெட் டீசல் ஜெனரேட்டர் சமநிலை நீர்த்தேக்க தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி என 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளை திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர் தொட்டி வளாகத்தில் தொடக்க விழா நடைபெற்றது. இதை தமிழ்நாடு நாகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஓராண்டுக்குள் திருச்சி மாநகராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட கடிநீர் தடையின்றி 24 மணி நேரமும் வழங்கப்படும் என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், திமுக பார்க்காததா? எமர்ஜென்சியையே பார்த்த கட்சி… திமுகவினர் எப்போதும் எதிர்ப்பை சமாளிக்கும் திறனோடுதான் இருப்பார்கள். தப்பு செஞ்சாதானே நடவடிக்கை எடுப்பார்கள்… எடுக்கட்டும்… என்றார்.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சையில் பனகல் பில்டிங் அருகே நேற்று நடைபெற்றது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம் என்றும் மீறி பேசினால் அவர்களின் பிசினசில் கை வைப்போம் என்றும் பேசினார். மேலும் அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு, பதிலடியை சம்மட்டி அடிபோல கொடுப்போம் என்று காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். தற்போதைய தலைவராகி இருப்பதால் தன்னை காட்டிக் கொள்வதற்காக அவர் இப்படியெல்லாம் மிரட்டல் தொனியில் பேசி வருவதாக அவர் தெரிவித்தார்.