தமிழ்நாடு

“சார் மாஸ்கை எடுங்க… எப்பசார் பார்க்கிறது… ஒரு டைம் பார்க்கிறோம் சார்”… முதலமைச்சரை நெகிழ வைத்த பெண்…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பெண் ஒருவர் முகக்கவசத்தைக் கழற்ற சொல்லிவிட்டு அவரிடம் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரியில் நேற்று துவக்கி வைத்தார். விழா முடிந்த பின்னர், ஓசூர் சாலையில் முதலமைச்சர் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த ரம்யா என்ற பெண் ஒருவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து, சார் மாஸ்கை எடுங்க… எப்ப சார் பார்க்கிறது… மாஸ்க்கை எடுங்க சார்… ஒரு டைம் பார்க்கிறோம்… ஒரு செகண்ட்தான் சார்… எப்ப பார்க்கிறது சார்… ரொம்ப வருஷங்களா ரொம்ப ஆசையா இருக்கிறோம்… என சத்தமாக கூறினார்.

இதையடுத்து காரை நிறுத்த சொன்ன முதலமைச்சர், தனது முகக்கவசத்தை கழற்றிவிட்டு, அந்த பெண்ணிடம் புன்சிரிப்புடன் பேசினார். இன்ப அதிர்ச்சி அடைந்த ரம்யா, தன்னிடம் இருந்த கடிதம் ஒன்றை முதலமைச்சரிடம் வழங்கி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு பெயரே ஸ்டாலின்தான் சார்… என அந்த பெண் தெரிவித்ததார்.

எங்கள் குடும்பம் திமுக மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் மிகவும் பற்றுக் கொண்டது எனவும் அவரை சந்தித்து, முகத்தைப் பார்த்து பேசியது சந்தோஷமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், தான் கொடுத்த கடிதத்தில், பெயர் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டுள்ளேன். எனக்குஅவர் நிச்சயம் போன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ரம்யா கூறினார்.

பெண்ணின் வேண்டுகோளை ஏற்று முகக்கவசத்தை கழற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அணுகுமுறையை பெரும்பாலானோர் வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.