“சொகுசுகார் வரி விலக்கு”… விஜய்யைத் தொடர்ந்து தனுஷ்-க்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி…
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் தனுஷ்-க்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். சாமானியர்கள் வரி செலுத்தும்போது நடிகர்கள் ஏன் வரி விலக்கு கோருகிறார்கள் என்றும், சாமானியனுக்கு ஒரு நீதி, நடிகருக்கு ஒரு நீதி இல்லை எனவும் நீதிபதி கடுமையாக கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீதிபதி, சராமரியாக கேள்வி எழுப்பினார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு ஏன் வரி செலுத்த தயங்குகிறீர்கள் என்றும் சாமானியர்கள் பெட்ரோல், சோப்பு உள்ளிட்டவைகள் வாங்கும்போது அதற்கான வரி செலுத்துவதாகவும், ஆனால் பல கோடி ரூபாய் செலவில் கார் வாங்கும்போ அதற்கான வரியை செலுத்த மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
சாமானியனுக்கு ஒரு நீதி, நடிகருக்கு ஒரு நீதி இல்லை எனவும் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். இதில் எந்தவிதமான விலக்கும் அளிக்க முடியாது என நீதிபதி கூறினார். நடிகர் தனுஷ் தன்னுடைய தொழில் என்னவென்பது குறித்து தெரிவிக்காமல், பொத்தம் பொதுவாக வரி விலக்கு கேட்டுள்ளார். யார் வழக்கு தொடர்ந்தாலும், அவர் யார், என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் நடிகர் என்பதை மறைத்தது குறித்து நடிகர் தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம். சுப்ரமணி கூறினார்.
தனது வண்டிக்கு பெட்ரோல் போடும் ஒரு பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் செலுத்தினால் என்ன? கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கினாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும். இறக்குமதி காருக்கு இன்னும் எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்பதை வணிகவரி துறை கணக்கிட்டு விவரங்களை நீதிமன்றத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷின் வழக்கறிஞர், மனுவை திரும்ப பெறுவதாக கூறியதற்கு, நீதிபதி மறுப்பு தெரிவித்தார். சட்டத்தை அனைவரும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
