மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு… 7 பேருக்கு தூக்கு 2 பேருக்கு ஆயுள்….
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேரில 7 பேருக்கு தூக்குதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறு காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு, நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.
கொலை சம்பவம் தொடர்பாக, ஜேம்ஸ் சதீஷ் குமார், பொன்னுசாமி, மேரிபுஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் ஆப்ரூவராக மாறிய நிலையில், விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேரில் 7 பேருக்கு சென்னை நீதிமன்றம் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
தீவிர குற்றம் புரிந்தவர்களான பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ் குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்ரூவராக மாறிய ஐயப்பனுக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
