விளையாட்டு

முதலமைச்சருக்கு ஒலிம்பிக் வாளை பரிசாக கொடுத்த பவானிதேவி…

டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒலிம்பிக் வாளை அவருக்கு பரிசாக கொடுத்தார்.

ஜப்பான் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேற போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். இரண்டாவது சுற்று போட்டி வரை முன்னேறிய பவானி தேவி, பிரான்ஸ் வீராங்கனையிடம் 7-15 என்ற புள்ளிகளில் தோல்வியடைந்தார்.

இதன் பின்னர் சென்னை திரும்பிய பவானி தேவி, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநானையும் அவர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவானி தேவி, நன்றாக விளையாடியதாக முதலமைச்சர் பாராட்டியதாக கூறினார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக வாள்விச்சு போட்டியில் நான் கலந்து கொண்டேன் என்றும், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக் கூடியதாக அமைந்துள்ளது என்றார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் குடும்பத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறினார்.

முதலமைச்சருக்கு தன்னுடைய ஒலிம்பிக் வாளை பரிசாக கொடுத்ததாகவும், ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக வாள்வீச்சில் முதல் முறையாக பயன்படுத்திய வாள் என்பதால், அதனை பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்ததாக பாவானி தேவி கூறினார். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நன்றாக விளையாட வேண்டும், அதற்கு இந்த வாள் உனக்கு தேவை எனக் கூறி முதலமைச்சர் எனக்கே அதை திருப்பி பரிசாக கொடுத்ததாக பவானி தேவி கூறினார்.