ஜெ. படத்திறப்பை திமுக புறக்கணித்ததால் கருணாநிதி படத்திறப்பில் அதிமுக பங்கேற்கவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பை திமுக புறக்கணித்ததால், கருணாநிதி படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தும் அவர் விழாவில் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவிற்கு, அதிமுக தரப்பில் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, நானே அழைத்தும் எதிர்கட்சி தலைவர் விழாவில் பங்கேற்கவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாடுவது உள்பட பல்வேறு விஷயங்களில் குளறுபடி உள்ளதாகவும், எனவே விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற முடிவை அதிமுக எடுத்ததாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கொண்டாடப்பட்ட வைரவிழாவின்போது திமுகவினர் கலந்து கொள்ளவில்லை. சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவினை திமுகவினர் புறக்கணித்தனர். அப்போது அவர்கள் எங்கள் கட்சிக்குரிய மரியாதையையும், தலைவருக்குரிய மரியாதையையும் கொடுக்கவில்லை.
1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் இல்லை. மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற நூற்றாண்டு வந்ததாக கூறுகிறார். இதுபோல் பல விஷயங்கள் குளறுபடி உள்ளதால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற முடிவை எடுத்ததாக ஜெயக்குமார் கூறினார்.
