அரசியல்தமிழ்நாடு

“ஓ.பி.எஸ்., கூறுவது போன்று ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை”… அமைச்சர் ராஜ கண்ணப்பன் விளக்கம்…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போன்று அரசு பேருந்துகளில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கமளித்துள்ளர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தற்போது அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துவிட்டு, ஆண் பயணிகளிடம் இரு மடங்காக கட்டணம் வசூலிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது என்றும் அதை கெடுக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவல்களை கொடுத்து வருவதாக கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போன்று அரசு பேருந்துகளில் கட்டண உயர்த்தப்படவில்லை என்றும், எந்த கழகத்திலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றார். போக்குவரத்து கழகங்களில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் 40 சதவிகித்தில் இருந்து 60 சதவிகிமாக உயர்ந்துள்ளதாகவும், தன்இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியிட்ட அறிக்கையில் தவறான தகவல் இடம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.