சமூகநீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது…! அதிரடி காட்டும் வி.பி.துரைசாமி…
சமூகநீதி என்பது ஒரு கட்சிக்கோ, ஒரு குடும்பத்தாருக்கு மட்டுமே சொந்தமானது இல்லை என்றும் சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீண்டகால பிரச்சனையை தீர்க்க மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி, சமூக நீதி காவலராக பிரதமர் மோடி விளங்குவதாக கூறினார்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறிய அவர், மாணவர்கள் மீது கொண்ட அக்கறைதான் காரணம் என்றார். இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஒருபோதும் பாஜாக இருந்ததில்லை என்றும் அது தற்போது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.
சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கோ, ஒரு குடும்பத்தாருக்கோ மட்டுமே சொந்தமானது இல்லை. சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சி அமைத்து 85 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருக்கும் ஒரே கட்சி திமுக தான் என விமர்சித்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழர் நலனைக் காப்பதில் பாஜக பாரபட்சமின்றி நேர்கோட்டில் உள்ளது என்றும், தமிழக விவசாயிகளின் உரிமையை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
