அரசியல்தமிழ்நாடு

“பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்… ஆண்களிடம் இரு மடங்கு கட்டணமா?” ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்தது.

அரசின் திட்டத்தால், ஏராளமான பணிக்கு செல்லும் பெண்கள் பயனடைந்துள்ளனர். அரசின் இந்த திட்டத்தால், மாதந்தோறும் செய்யப்படும் போக்குவரத்துக்கான செலவு மிச்சப்படுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அரசின் திட்டத்தால், 1,358 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் எனக் கூறிவிட்டு ஆண்களிடம் அதிகம் கட்டணம் வசூலிப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாய் என்றிருந்த நிலையில், தற்போது 10 ரூபாய் வசூலிப்பதா என கேட்டுள்ளார்.

மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தால், ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவதை தடுத்து நிறுத்துங்கள் என்றும், இந்த கட்டண வசூல் அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரிந்து நடக்கிறதா? அல்லது தெரியாமல் நடக்கிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய யுக்திகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் என்றும், இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, ஆண்கள் தலையில் சுமத்தப்படும் இழப்பை தடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.