இந்தியா

நமக்கு தேவையானதை நாமே செய்து கொள்ள வேண்டும்… மேகதாதுவில் அணைகட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என பாஜக எம்.பி. பேச்சு…

மேகதாதுவில் அணைகட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்றும், நமது மாநிலத்திற்கு வேண்டிய பணிகளை நாமே செய்து கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என்று பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவதற்கு, தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து வருகிற 5 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அவரது அறிவிப்புக்கு, கர்நாடக முதலமைச்ச்ர பசவராஜ் பொம்மை, மேகதாது அணை திட்டம் கர்நாடகவின் உரிமை, அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கவலை இல்லை என்றும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மைசூரு – குடகு தொகுதி பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, உண்ணாவிரத போராட்டம் குறித்து விவாதிப்பது தேவையில்லாத ஒன்று என்றும், மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவையில்லை என்றும் கூறியுள்ளார். கடிதம் எழுதுவது, அடுத்த மாநிலத்தைப் பற்றி நாம் குறை கூறுவது சரியானது அல்ல என்றும் நமது மாநிலத்திற்கு வேண்டிய பணிகளை நாமே செய்து கொள்ள வேண்டும் என்றும் பாஜக எம்.பி.பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார்.