“கழுத்தை அறுத்து விடுவோம்”… அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாக பரவும் தகவல்…
ஊராட்சி ஒன்றிய தலைவர் பகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்றும் யாராவது தோல்வியடைந்தால், கட்சி ஒன்றிய செயலாளர்கள் கழுத்தை அறுத்துவிடுவோம் என்று அமைச்சர் த.மோ.அன்பரசன் பேசியதாக பரபரப்பு தகவல் வெகுவாக பரவி வருகிறது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மதிமுகவில் 25 ஆண்டுகளாக இருக்கின்ற மல்லை சத்யா நம்மை நம்பித்தான் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்து விட்டார். அவரது தோல்விக்காக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்றும் கட்சியினரிடையே எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். தேர்தலில் துரோகம் செய்தால் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலை வரும். துரோகிகளை கேட்க நாதி இருக்காது. தலைமை அறிவிக்கின்ற வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் பேசியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் பகுதிகளைக் கைப்பற்றியாக வேண்டும் என்றும் யாராவது தோல்வியடைந்தால், கட்சி ஒன்றிய செயலாளர்கள் கழுத்தை அறுத்துவிடுவோம் என்று அமைச்சர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
