தமிழ்நாடு

வழக்கு போட்டுவிடுவதாக கூறி மூதாட்டியை மிரட்டிய இன்ஸ்பெக்டர்… வைரலாகும் வீடியோ…

தென்காசியில், வீட்டில் ஏற்றப்பட்டிருந்த இந்து முன்னணி கொடியை அகற்றும்படி வீட்டு உரிமையாளரை காவல் ஆய்வாளர் மிரட்டியதால் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

மத ரீதியாக பாகுபாடு பார்த்து பொய்ப்புகாரில் இந்துக்களை கைது செய்துள்ள காவல் துறையைக் கண்டிப்பதாக கூறி கடந்த 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சி கொடியை தங்கள் வீடுகளில் பயன்படுத்திக் கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் இந்து முன்னணி கொடியை வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், இந்து முன்னணி கொடியை அகற்றும்படி முதிய பெண்மணியிடம் கூறியுள்ளார். எங்கள் வீட்டினுள் வைத்துள்ளதை எதற்கு எடுக்க வேண்டும் என்று பெண்மணி கேட்டதற்கு காவல் ஆய்வாளர், முதிய பெண்மணியை மிரட்டி, வழக்குப் போட்டுவிடுவேன் என்று கூறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர் ஒருவர் கூறுகையில், இந்து முன்னணியைச் சேர்ந்த செல்லத்துரை தனது வீட்டில் இயக்க கொடியை ஏற்றியிருந்தார். மேலும் மதமாற்றத்துக்கும் அவர் தடையாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்தவர்கள், ஒரு மாதத்திற்கு முன்பு டிரான்ஃஸ்பார்மரை ஆஃப் செய்துவிட்டு நள்ளிரவில் செல்லத்துரையின் ஆட்டோவையும், வீட்டையும் அடித்து நொறுக்கியதாக கூறினார். இது தொடர்பான கடையம் போலீசார் கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி இயக்கம் எதிர்ப்பு தெரிவித்த பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்ததாக கூறினார்.

அரசுக்கு சொந்தமான இடத்தில் செல்லத்துரையும், சர்ச்சும், ஆக்கிரமிப்பு செய்திருப்பதை வருவாய் துறை உறுதி செய்தனர். ஆனால், சர்ச் ஆக்கிரமிப்பை அகற்றாமல் செல்லத்துரை வீட்டு காம்பவுண்ட் சுவரை அகற்ற போலீசார் முற்பட்டுள்ளனர். இதற்கு செல்லதுரை எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கைது செய்தனர். இதன் பின்னர் சர்ச் நிர்வாகம் ஆக்கிரமித்திருந்த இடத்தையும் வருவாய் துறை மீட்டதாக கூறினார்.