தமிழ்நாடு

பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…

90 பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுக்கள், செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர் அச்சிட்டவர், வெளியிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

தி இந்து நாளிதழ் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர் மீது 1 வழக்கும், தினமலர் நாளிதழ் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழ் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், நக்கீரன் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், முரசொலி ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழ் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன. புதிய தலைமுறை, நியூஸ் 7, சத்யம், கேப்டன், என்டிடிவி, டைம்ஸ் நவ், கலைஞர் தொலைக்காட்சி ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திமுக அரசு திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.