வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக… கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்…
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவில்லை என்று கூறியும், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக கொறாடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் குனியமுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியில் அமர்ந்துவிட்டு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறினார்.
நீட் தேர்வு ரத்துக்கு முதல் கையெழுத்து என்றார்கள். மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்டுவதை வேடிக்கை பார்க்கிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். அதையும் தற்போது வரை தரவில்லை. அதிமுக ஆட்சியில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் விகிதம் குறைவாக இருந்தது. அது தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றாலும், அதனை நிறைவேற்ற அதிமுக தொடர்ந்து உழைக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
