அரசியல்தமிழ்நாடு

திமுகவின் 505 வாக்குறுதிகள் என்னவானது? எடப்பாடி பழனிசாமி கேள்வி…

திமுக அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் சூரப்பேட்டையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுகவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின்தேர்தல் வாக்குறுதிகளான 505 அறிவிப்புளில், முக்கியமான சில விஷயங்களைக் கூட நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக அரசு ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றும் கூறினார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானதும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யாமல், கண் துடைப்பிற்காக கமிஷன் ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்தார். கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு, 5 சவரன் வங்கி நகைக் கடன் தள்ளுபடி, மாதம் தோறும் மின் கட்டணம் வசூல் போன்ற வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் இதுவரை அது சம்பந்தமான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும என்ற வாக்குறுதி என்னாவனது என்றும் தற்போது எந்த முறையில், மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது என்பது கூட தெரியவில்லை என்றார்.

தமிழகத்தில மின்கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டது, மக்களை திசை திருப்புவதற்காக இந்த சோதனை மேற்கொள்வதாகவும் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.