சினிமா

“சொகுசுகார் விவகாரம்” நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை…

சொகுசுகார் வழக்கில் அபராதம விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை, கடந்த 2012 ஆம் அண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நடிகர் விஜய் சென்றபோது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. நுழைவு வரி விதிக்க தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின்போது திரையில் சமூகநீதிக்கு பாடுபடுவதாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள், வரி விலக்கு கோரவதை ஏற்க முடியாது என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்தார். நடிகர் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்தும், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தை நீக்கக்கோரியும் நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட காருக்குநுழைவு வரி செலுத்த தயார் என்றும், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தனி நீதிபதி குறிப்பிட்ட விமர்சனங்களை நீக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

விமர்சனங்களைப் பற்றி நீதிமன்றம் முடிவெடுக்லாம் என வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரியை 7 அல்லது 10 நாட்களில் செலுத்த தயார் என்று நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரி தொகை குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்க வணிக வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விஜய் ஏற்கனவே 20 சதவிகித வரியை செலுத்தியுள்ள நிலையில் மீதமுள்ள 80 சதவிகித தொகையை ஒரு வாரத்திற்கள் செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.