அரசியல்விளையாட்டு

ஒலிம்பிக் சென்றுள்ள 2 வீராங்கனைகளுக்கு அரசு வேலை… முதலமைச்சர் உத்தரவு…

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீராங்கனைகள் சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 5 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். ஆடவர் பிரிவில் ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும் கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி, பயிற்சி செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலையிலும், அயராது உழைத்து ஒலிம்பிக்கில் சென்றுள்ளார். திருச்சியைச் சேர்ந்த சுபா வெங்கடேசனும், மிகுந்த வறுமையிலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றபோதிலும், அரசு பணி கிடைக்கவில்லை என்று சுபா வெங்கடேசன் வருத்தம் தெரிவித்திருந்தார். ஒலிம்பிக் போட்டியில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முடியும் என தான் நம்புவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சமிக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சுபா வெங்கடேசன், தனலட்சுமி தாயகம் திரும்பியவுடன், அவர்களுக்கு அரசு பணிக்கான ஆணை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒலிம்பிக் செல்லும் தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார். போட்டியாளர்கள் தங்கம் வென்றால் 3 கோடி ரூபாயும், வெள்ளி வென்றால் 2 கோடி ரூபாயும் வெண்கலம் வென்றால் 1 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.