பூமியை நெருங்கி வரும் குறுங்கோள்… பூமி மீது மோதாது என விஞ்ஞானிகள் கருத்து…
விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் சுற்றி வரும் நிலையில், அவைகள் பூமி அருகே கடந்து செல்வது வழக்கம். அவற்றில் சில, பூமி மீது விழுந்துள்ளன. ஆனால், பெரும்பாலான கற்கண் வளிமண்டலத்தில் வெடித்து, பூமிக்கு வரும்போது காற்று உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுவதுண்டு. அதையும் மீறி சில கற்கள் எரியாமல் பூமியில் விழுவதும் உண்டு.
பூமிக்கு அருகே நகர்ந்து செல்லக்கூடிய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அதில் ஆயிரத்து 45 சிறுகோள்கள் ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் 4 கால்பந்து மைதானம் அளவு கொண்ட குறுங்கோள் ஒன்று இன்றிரவு பூமியை கடந்து செல்ல உள்ளது.
2008 ஜி 20 என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் இன்றிரவு 11.21 மணியளவில் பூமி அருகே கடந்து செல்ல உள்ளது. இந்த குறுகோள், பூமி மீது மோதாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 97 மீட்டர் அகலமும், 230 நீளமும் கொண்ட குறுங்கோள், மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணப்படுவதாகவும், பூமியில் இருந்து 45 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்ல உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1935 ஆம் ஆண்டு 19 லட்சம் தொலைவிலும், 1977 ஆம் ஆண்டு 27 லட்சம் தொலைவிலும் இதே குறுங்கோள் பூமியை கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
