தரமான இலவச மாஸ்க் வழங்க ஆலோசனை… அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…
அதிமுக ஆட்சியில் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டன என்றும், தரமான இலவச முகக்கவசங்கள் வழங்குவதற்காக தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முகக்கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் எந்தவித உபயோகமும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
நாடா துணியினால் முகக்கவசம் வழங்கி பயனற்ற வகையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். தரமற்ற முகக்கவசம் விநியோகம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். தடுப்பூசி போடும் பணியை இந்தியாவிலே முதன் முறையாக தனியர் மருத்துவமனைகளில் சுயசார் பங்களிப்புடன் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை புதன்கிழமை காலை 10 மணிக்கு துவங்க இருப்பதாக கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டத்திற்குப் புறம்பாக மதுபான பார்கள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் பார் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் தொடங்கப்படும் என்றம் இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
