பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்கள்… ஊழியர்களுக்கு விதிகள் அமல்…
அரசுப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவித்து. அதன்படி கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பெண் பயணிகளுக்கு இலவச டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மாநகர பேருந்துகளில் பெண் பயணிகளிடம் நடத்துனர் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாக புகார் கூறப்பட்டது. இந்த நிலையில், அரசு பேருந்துகளில் பெண் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாநகர் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை பொது மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் நின்றிருந்தாலும் கூட, பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்து நிறுத்தம் இருக்கும் இடத்திற்கு முன்பாகவே அல்லது அதைத் தாண்டியோ பேருந்தை நிறுத்தி பயணிகளுக்கு இடையுறு ஏற்படுத்தக் கூடாது.
இடம் இல்லை என்ற காரணத்தைக் கூறி பெண் பயணிகளை பேருந்தில் இருந்து, இறக்கிவிடக் கூடாது என்றும், மூதாட்டிகள் இருக்கைகளில் அமர எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண் பயணிகளிடம் எரிச்சலாகவோ, கோபமாகவே, இழிவாகவோ பேசக் கூடாது என்றும் பெண்கள் பேருந்தில் ஏறும்போதும் இறங்கம்போதும் கண்காணித்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
