பிளஸ் 2 தனித்தேர்வர்களும் பாவம்தான்… ஆல் பாஸ் பண்ணிடுங்க… எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோரிக்கை…
12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தனித் தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு மதிப்பீட்டு அணுகுமுறை என்னவென்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து அவர்களின் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் தனித் தேர்வர்களாக பதிவு செய்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர்களுக்கு தேர்ச்சி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர்களுக்கான தேர்வும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் தேர்வு, பின்னர் நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் வந்தால், எப்போது அந்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வார்கள் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், தனித் தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
