தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள்: அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு முறை ஆகியவை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது , சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பெண்கள் தனிச்சிறைக்கு சென்ற அமைச்சர் ரகுபதியை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக சிறைச்சாலைகளில் அடிப்படை மற்றம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு நடத்த வந்துள்ளதாக கூறினார்.
நளினி உட்பட சிறைக் கைதிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்துள்ளனர். என்று சிறையில் காலணி தயாரிப்பு, நெசவு தொழிலில் கைதிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக கூறினார். சிறையில் உள்ள தொழில் கூடங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வேலூர், மத்திய ஆண்கள் சிறைக் கைதிகளால் தொரப்பாடி பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தப்படுவதைப்போல், தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் என்றும், பெட்ரோல் பங்க் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
