Covid19தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் சென்னை புதிய சாதனை…!

கொரோனா தடுப்பூசி 2-வது தவணை மருந்து செலுத்திக் கொண்டவர்களில் நாட்டிலேயே சென்னை நகரம் முதலிடத்தில் வகிக்கிறது.

சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 19.16 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 17.45 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளர். இந்தியாவில், மொத்த பாதிப்பு 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின எண்ணிக்கை, 3.03,53,710 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளம்படி மத்திய – மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் நகரங்களில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், சென்னையில் மட்டும்தான் 2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் 11 சதவிகித நபர்கள் இரண்டாம் தவணை செலுத்தி கொண்டுள்ளனர். பெங்களூருவில் 10 சதவிகிதத்தினரும், டெல்லி மற்றும் மும்பையில் தலா 7 சதவிகிதத்தினரும், ஐதராபாத்தில் 5 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூருவில் 64 சதவிகிதமும், சென்னையில் 43 சதவிகிதமும், தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 91 சதவிகிதமும், சென்னையில் 85 சதவிகிதமும் செலுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.