கொரோனா தடுப்பு நடவடிக்கை…! மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை…!
கொரோனா 3-வது கட்ட அலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலை குறையத் தொடங்கியதை அடுத்து, பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, சர்வதேச விமான போக்குவரத்து, திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் கட்ட அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொரோனா மூன்றாம் கட்ட அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாம் அலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில், பிரதமர் மோடி, 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, மூன்றாவது அலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், 3-வது அலை குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
