இந்தியா

காலில் விழ முயன்ற பெண்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் செய்கை…

தனது காலில் விழ முயன்ற பெண்ணுக்கு, பிரதமர் மோடி பதில் மரியாதை செய்துள்ளார். பிரதமரின் இந்த செய்கை பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு, பிரதமர் மோடி நேற்று சென்றார். அப்போது பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் – சேய் மருத்துவ பிரிவு, பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்தம், வாரணாசி – காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று மேம்பாலங்கள், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

முன்னதாக வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். அங்கிருந்த பெண்கள், பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் வணக்கம் தெரிவித்தார். அப்போது பிரதமரின் காலில் பெண் விழ முயன்றுள்ளார். இதைப் பார்த்து சற்று விலகிய மோடி, அந்த பெண்ணை நோக்கி குனிந்து பதில் மரியாதை செய்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோவை பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சினிவாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த செயல் பெண்கள் மீதான அவரது உயர்ந்த மரியாதையைக் காட்டுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.