Uncategorized

மாணவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் எளிமைப்படுத்தப்படும்: ஐ. லியோனி

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி இன்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியிய்ல கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டதற்கு எதிர்கட்சியினர் பலர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் லியோனி, பாடநூல் – கல்வியியல் கழக தலைவராக இன்று பொறுப்பேற்றார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு தற்போது பாடநூல் கழகத்தில் மிகப்பெரிய பொறுப்பை முதலமைச்சர் வழங்கியிருப்பதாக கூறினார். மேலும், மாணவர்கள் பாடநூல்களை இனிமையாகவும், எளிமையாகவும் படிக்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றார். இதுவே எனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பாடநூல் கழகம் முயற்சி செய்யும் என்றார். கருணாநிதியின் இலக்கிய பணிகள் குறித்தும், கல்விக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள் குறித்தும் வருங்கால தலைமுறையினர் பாடநூல் வழியாக தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்.